Skip to main content

"நாங்கள் அவரை விடமாட்டோம்" - லக்கிம்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி சூளுரை!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

RAHUL GANDHI

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு விசாரணைக் குழு, சில தினங்களுக்கு முன்னர் லக்கிம்பூர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும், அந்த சம்பவத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி இருந்ததாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

 

விவசாயிகள் கொல்லப்பட்டதில் சதி இருந்தது என்ற சிறப்பு விசாரணைக் குழுவின் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்த எதிர்க்கட்சிகள், தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தின. அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், நாடாளுமன்றத்தில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கையை வலியறுத்தி அமளியில் ஈடுபட்டு அவ்வப்போது அவையை முடக்கினர்.

 

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சௌக் பகுதிவரை போராட்ட அணிவகுப்பு நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் அவரை விடமாட்டோம். மத்திய இணையமைச்சர் சிறைக்கு அனுப்படுவார்” என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது, "அமைச்சர் (அஜய் மிஸ்ரா) தொடர்பாக பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அதன் வேலையைச் செய்யவில்லை, பிரதமரும் அவரது வேலையைச் செய்யவில்லை. இந்தப் பிரச்னையை (லக்கிம்பூர் வன்முறை) மீண்டும் மீண்டும் எழுப்பினோம். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. இந்திய மக்களுக்கு எதிரான செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் அவரை (இணையமைச்சர்) அஜய் மிஸ்ராவை விடமாட்டோம். இன்றோ நாளையோ அவர் சிறைக்கு அனுப்பப்படுவார்.

 

அமைச்சரின் மகன் விவசாயிகளைக் கொன்றார். (சிறப்பு விசாரணைக் குழு) அறிக்கை, இது ஒரு சதி எனக் கூறுகிறது. இதுதொடர்பாக பிரதமர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நீங்கள் (பிரதமர்) அவர்களிடம் (விவசாயிகளிடம்) மன்னிப்பு கேட்கிறீர்கள், ஆனால் அமைச்சரை நீக்கவில்லை.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்