Skip to main content

"பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம்" - உத்தவ் தாக்கரே

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

uddhav thackeray

 

சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கட்சி தொண்டர்களுக்குக் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

 

நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியது பின்வருமாறு: "இந்துத்துவாவுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காகப் பயன்படுத்தவில்லை. சிவசேனா பாஜகவை விட்டே வெளியேறியுள்ளது. இந்துத்துவாவை விட்டு அல்ல. பாஜக அதிகாரத்தைப் பிடிக்க, சந்தர்ப்பவாதமாக இந்துத்துவாவைப் பயன்படுத்தியது. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணாக்கிவிட்டது.

 

பாஜகவின் தேசிய லட்சியங்கள் நிறைவேறுவதற்காக அவர்களை முழு மனதுடன் ஆதரித்தோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தலைமை தாங்குவோம். தேசிய அளவில் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்பதே இருவருக்குமிடையே இருந்த புரிந்துணர்வு. ஆனால், எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது. எங்களது இடத்திலேயே எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாங்கள் திருப்பி அடிக்க வேண்டியிருந்தது. பாஜக தனது அரசியல் வசதிக்கேற்ப தனது கூட்டாளிகளைப் பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசுகிறது. பாஜக என்றால் இந்துத்துவா என அர்த்தம் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்ற எனது கருத்தில் நான் உறுதியாக உள்ளேன்.

 

நமது புதிய கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடிமட்டத்தில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. நாமும் அந்தத் திசையில் செயல்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில், நம்மிடம் இருந்த இரண்டு மேலவை இடங்களை இழந்ததுள்ளோம். இது அலட்சியத்தால் நிகழ்ந்தது, சதியால் அல்ல என நான் நினைக்கிறேன். இந்தப் பின்னடைவு இருந்தபோதிலும், தேசிய அளவில் தனது இருப்பை பலப்படுத்துவதையும், டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் சிவசேனா இலக்காகக் கொள்ள வேண்டும்". இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்