Skip to main content

பரபரப்பான அரசியல் சூழல்; ஹரியானாவில் புதிய முதல்வர் பதவியேற்பு! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். மொத்தம் 90 சட்டமன்ற இடங்களைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க. ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதில், பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் நேற்று (11-03-2024) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியது.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் குருசேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவருமான நயாப் சைனி பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக அமைய உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உடன் ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தர உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயாப் சைனி ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா, முதல்வராகப் பதவியேற்க நயாப் சைனிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

இந்நிலையில் நயாப் சிங் சைனி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஹரியானா முதல்வராகப் பதவியேற்றார். நயாப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்களான ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரிலால், மூல்சந்த் சர்மா, கன்வர் பால் குஜ்ஜர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டரும் கலந்து கொண்டார். மேலும் மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்