போலியோ எனும் இளம்பிள்ளைவாத நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கின் என்பவரின் நினைவைப் போற்றும் வண்ணம் 'உலக போலியோ தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சற்று தாமதமாகவே ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி தமிழகத்தில்கூட கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் எக்மால் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (01.02.2021) போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.