Skip to main content

விவசாயிகள் லாபகரமான விலையைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஆதரவு!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

ambani

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களால் அம்பானி மற்றும் அதானியின் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தங்கள் நிலம் சென்றுவிடும் எனவும், அவர்களுக்கே இந்த வேளாண் சட்டங்களால் லாபம் எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்துவதாகக் குற்றசாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம், தங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்படுவதை மாநில அரசுகள் தலையிட்டுத் தடுக்கவேண்டுமென பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது.

 

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனமோ, அதன் துணை நிறுவனங்களோ கார்ப்பரேட் விவசாயத்திலோ அல்லது ஒப்பந்த விவசாயத்திலோ ஈடுபடவில்லை. அதில் ஈடுபடும் திட்டமும் இல்லை” என தெரிவித்துள்ளது.

 

‘கார்ப்பரேட் அல்லது ஒப்பந்த விவசாயத்திற்காக ரிலையன்ஸ் அல்லது அதன் துணை நிறுவனங்கள் எதுவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பஞ்சாப் / ஹரியானாவில் மட்டுமல்லாமல், இந்தியாவில் எங்கும் விவசாய நிலங்களை வாங்கவில்லை. அவ்வாறு செய்ய எந்தத் திட்டமும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனங்கள், சப்பளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்குகின்றன. விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதில்லை என தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், விவசாயிகள் நியாயமான மற்றும் லாபகரமான விலையைப் பெறுவதை ஆதரிப்பதாக’ கூறியுள்ளது.

 

‘மேலும், எங்கள் சப்ளையர்களை, குறைந்தபட்ச ஆதார விலை முறை அல்லது விவசாயிகளுக்கு நியாயமான விலையைத் தரும் வேறு எந்த வழிமுறையையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம். இது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டதாகவும் இருக்கலாம்’ என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 

தங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்துவதை தடுக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்யப்போகும் மனுவில், "இந்த வன்முறைச் செயல்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. மேலும் முக்கிய தகவல்தொடர்பு உள்கட்டமைப்பிற்கு சேதத்தையும் இடையூரையும் ஏற்படுத்துகின்றன. இந்தச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகள், தங்கள் சுய லாபத்துக்காகவும், வணிகப் போட்டியாளர்களின் தூண்டுதலாலும் தொலைத்தொடர்பு கோபுரங்களைச் சேதப்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்