அயோத்தியில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடடிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அங்கு இராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இக்கோயிலின் கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் 2024 ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு, இதுவரை 100 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதாக, அந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், நன்கொடை குறித்த தகவல்கள் இதுவரை தலைமை அலுவலகத்தை அடையவில்லை. ஆனால் எங்கள் காரியகர்த்தர்கள் அளித்த தகவலின்படி, அவர்கள் இதுவரை 100 கோடி அளவிலான நன்கொடையை பெற்றுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இராமர் கோவில்கட்ட நன்கொடை வழங்கியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்தும் பேசியுள்ள சம்பத் ராய், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு இந்தியர். இராமர் இந்தியாவின் ஆன்மா. எனவே யார் வேண்டுமானாலும் இராமர் கோயில் கட்ட நன்கொடை அளிக்கலாம்’ என குறியுள்ளதோடு, ‘ராம்நாத் கோவிந்த் நன்கொடை அளித்ததில் எந்தத் தவறுமில்லை’ என கூறியுள்ளார்.