Skip to main content

“மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான போர்” - ராகுல் காந்தி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rahul Gandhi says Battle between Mahatma Gandhi and Godse

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

அதில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதனை எதிர்கொண்டு இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவிரமாக இயங்கி வருகிறது. 

 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ஷாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று இன்று (30-09-23) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வருகிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர் ஆகும். இந்த போரில், ஒரு பக்கம் காங்கிரஸும் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒருபுறம் மகாத்மா காந்தி, மற்றொரு பக்கம் கோட்சே. அதுபோல் இந்த போர் என்பது வெறுப்புக்கும், அன்பு மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். 

 

அவர்கள் எங்கு சென்றாலும், வெறுப்பை பரப்புகிறார்கள். இப்போது மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களிடம் அவர்கள் வெறுப்பைக் காட்டியதால் அதனையே அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்