Skip to main content

''வேறு மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை''-தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Published on 25/12/2022 | Edited on 25/12/2022

 

"Puducherry does not need another model of government" - Tamilisai Soundararajan interview

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரமாண்ட கேக்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து வெட்டி அதை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினர்.

 

இதனைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் புதிய ஆண்டு கரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்து புதிய வகை கரோனாவை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. கூட்டமாக இருக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும் எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மிக கவனமாக முககவசம் அணிய வேண்டும்.

 

ஏழை மாணவர்களும் பயனளிக்கும் வகையில் தான் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமையப்போகின்றது. இதில் எழும் வதந்திகளுக்கு இடமில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும். தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். நான் தமிழுக்கு எதிரி இல்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். மாநில அந்தஸ்து விவகாரம் எனக்கு நன்றாக தெரியும். மாநிலத்திற்கான அனைத்து திட்டங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் கிடைக்கும்.

 

புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மத்திய அரசு உதவி அளிக்கவுள்ளது. பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கும் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறேன். வேறு மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை. இப்போது மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து பேசுவோர் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள். ஏன் மாநில அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யவில்லை. நாங்கள் வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கும் நாங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறேன். ஆனால் நான் சார்ந்து இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பது ஏன் என்கிற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. மத எல்லைகளை கடந்து வாழ்த்துகளை பகிர வேண்டும், அது தான் மதச்சார்பற்றது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்