Skip to main content

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! 

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Puducherry Chief Minister Rangasamy hopes to give state status to Puducherry

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 25வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 26.08.2021 அன்று தொடங்கி, அன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று (01.09.2021) பேசியதாவது, “புதுச்சேரி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கலைந்து நல்ல ஆட்சியைத் தருவோம். புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் 9,924.41 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மூலதன செலவினங்களுக்கு 1,200.44 கோடி, வருவாய் செலவினங்களுக்கு 8,723.97 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கப்பட்டுவரும் நிதியுதவி 60 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக உயர்த்த 'நிதி ஆயோக்' கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். மத்திய அரசும் செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய அரசு 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி அளித்துள்ளதாக கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால் நாம் மே மாதம்தான் ஆட்சிக்கு வந்ததால் உடனடியாக கூடுதல் நிதி தரவில்லை. அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி பெற முடியும். மேலும், ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக 500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசு நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் எங்கள் நோக்கம். நீண்ட நாட்களாக முதல்வராக இருந்த அனுபவத்தில் மாநில அந்தஸ்து இல்லாதது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. தேவைப்பட்டால் இந்தக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்