Skip to main content

முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பு - மத்திய அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

supreme court

 

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

 

இவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த விசாரணையின்போது இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அளவுகோல் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியும், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

 

தொடர்ந்து நீதிபதிகள், எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது என கேள்வியெழுப்பினர். மேலும் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கான கிரீமிலேயர் வரம்பு 8 லட்ச ரூபாயாக இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது, அவர்களுக்கும், அப்பின்னடைவுகளை கொண்ட ஓபிசி பிரிவினருக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி எனவும் கேள்வியெழுப்பினர்.

 

தொடர்ந்து இரு பிரிவினருக்கும் 8 லட்சம் என்ற ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், சமமற்றவர்களை சமமாக ஆக்குகிறீர்கள் என தெரிவித்த நீதிபதிகள், 8 லட்சம் ரூபாயை வருமான உச்சவரம்பாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணையைத் தடை செய்வதாக தெரிவித்தனர்.

 

ஆனால் அறிவிப்பாணையை தடை செய்யவேண்டாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததோடு, விரைவில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதனை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதன் அடிப்படையில் 8 லட்ச ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு மத்திய அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்