Skip to main content

ஒத்துழையாமை இயக்கம்... பேரணி; கொதிக்கும் நாகாலாந்து - எச்சரிக்கும் பழங்குடியின இயக்கம்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

nagaland

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த 4ஆம் தேதி இரவு, பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவிகளைப் பாதுகாப்புப் படை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்தக் கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் மேலும் ஏழு பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) நடைபெற்ற வன்முறையில் மேலும் ஒரு நபர் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து நாகாலாந்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இராணுவமும் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், அப்பாவிகளை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின அமைப்பான கொன்யாக் யூனியன், இராணுவத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கொன்யாக் மண்ணில் இராணுவம் அணிவகுப்பை நடத்தக் கூடாது, ரோந்து பணியில் ஈடுபடக் கூடாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், கொன்யாக் கிராம சபைகள், மாணவர்கள் மற்றும் மக்கள் எவரும் பாதுகாப்பு படைகளிடமிருந்து எந்தவிதமான உதவிகளையும் ஏற்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ள கொன்யாக் யூனியன், இராணுவ தளம் அமைக்க போடப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறவும் அறிவுறுத்தியது.

 

அதனைத்தொடர்ந்து நாகாலாந்தின் ஐந்து கிழக்கு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியின இயக்கமான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பும் (ஈஎன்பிஓ), இராணுவத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது. அப்பாவிகளை சுட்டுக்கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும், ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ள அந்த அமைப்பு, இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற தேசிய விழாக்கள் கொண்டாடப்படாது, ஆட்சேர்ப்பு இயக்கம் அனுமதிக்கப்படாது. இராணுவ குடிமைத் திட்டங்களில் மக்கள் பங்கேற்க மாட்டர்கள் என அறிவித்தது.

 

இதன்தொடர்ச்சியாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, நேற்றைய தினம் (16.12.2021) மக்கள் பேரணிக்கு அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு நிதி கேட்டு பேரணியில் ஈடுபட்டனர். அதேபோல் மோன் மாவட்டத்திலும் கொன்யாக் யூனியன் அழைப்பின்படி பேரணியும், மாவட்டம் தழுவிய பந்த்தும் நடைபெற்றது. இதனால் அரசு அலுவலகங்கள் முதல் அனைத்தும் மூடப்பட்டன. 

 

மேலும்,  கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு நேற்று மோன் மாவட்ட துணை ஆணையர் மூலம் இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், 30 நாட்களுக்குள் நிதி வழங்கப்படவில்லையென்றால் இராணுவதிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடரும் என்றும், போராட்டம் நாகாலாந்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்