Skip to main content

உள்துறை அமைச்சக உத்தரவுக்கு தடை போட்ட உச்சநீதிமன்றம்...

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

msme companies salary issue in supreme court

 

லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 


கரோனா பரவலால் நாடு முழுவதும் சிறு தொழில்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் முடங்கியுள்ள சூழலில், தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு, லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29 அன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஊழியர்களுக்கு சம்பளம் தராத நிறுவனங்கள் மீது 2005-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

 

 


மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை மற்றும் பஞ்சாபில் உள்ள 41 சிறுதொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வு, "சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தரமுடியாத சூழல் ஏற்பட்டால், அந்த நிறுவனங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.


சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது. பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன. ஆனால், லாக்டவுனில் 40 நாட்களுக்கும் மேலாக உற்பத்தி நடக்காமலிருந்துள்ளது" எனத் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரத்துக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்