Skip to main content

வாரணாசியில் மோடிக்கு எதிராகக் களம் காணும் மம்தா..?

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

mamata - modi

 

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (01.04.2021) நடைபெற்றது. இதனையடுத்து அடுத்தகட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. 

 

இதற்கிடையே இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு முன் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "தீதி (மம்தா) வேறொரு தொகுதியில் நீங்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்ற வதந்தியில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? முதலில், நீங்கள் நந்திகிராமுக்குச் சென்றீர்கள். மக்கள் உங்களுக்குப் பதிலளித்தார்கள். நீங்கள் வேறு எங்காவது சென்றால், வங்காள மக்கள் உங்களுக்குச் சரியான பதிலை அளிக்கத் தயாராக உள்ளனர்" எனக் கூறினார்.

 

இதனையடுத்து இதற்குப் பதிலடி தந்த திரிணாமூல் காங்கிரஸ், 2024 தேர்தலுக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாரணாசியில் மோடி கடுமையான சவாலை எதிர்கொள்வார். வாரணாசியில் மோடிக்கு எதிராக மம்தா களமிறங்குவாரா என்பது குறித்து கட்சியும், கட்சித் தலைவரும் பின்னர் முடிவெடுப்பர் எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியா?" என பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை தாக்கியுள்ளார். ஆமாம் பிரதமரே. இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அது வாரணாசி. எனவே உங்கள் கவசத்தை தயார்செய்து கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார். இதனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா களமிறங்குவர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

மம்தா ஏற்கனவே பாஜகவிற்கு எதிராகத் திரள்வோம் என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்