Skip to main content

புதுச்சேரி பட்ஜெட்; எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா குற்றச்சாட்டு!

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Leader of Opposition R. Siva's speech on Puducherry budget

 

"புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய எந்த திட்டமும் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

 

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியதும், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ.11,600 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

 

இந்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தெற்கு மாவட்ட மாநில அமைப்பாளருமான இரா. சிவா எம்.எல்.ஏ, “புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அரிசி வழங்குவது, மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறப்பது, மின்துறை தனியார் மயத்தை நிறுத்துவது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே இருந்த ரூபாய் 334 சிலிண்டர் மானியம் குறைக்கப்பட்டு இப்போது ரூபாய் 300 மானியம் அறிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. புதிய தொழில் கொள்கை குறித்த அறிவிப்பு இல்லை. கல்வி மேம்பாட்டிற்கான அறிவிப்பு இல்லை. மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லை. மாநில கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை. அரசு பேருந்துகளில் பட்டியலின பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என பட்ஜெட்டில் அறிவித்திருப்பது ஜாதிய பாகுபாட்டை ஏற்படுத்தும். ஒட்டு மொத்தத்தில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்