Skip to main content

கேரளா பேராரயர் மீதான பாலியல் வழக்கில் திருப்பம்.... 

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
franco

 

கேரளாவில் பேராயர் மீது கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டம் தொடரும் வேளையில் நேற்று பேராயருக்கு ஆதரவாக அவர் சார்ந்த சர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து கன்னியாஸ்திரிகள் உட்பட ஒன்பது பேர் அந்தப் பேராயருக்கு எதிராக சதி செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஒருவர்  பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கடந்த ஜூலை மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை அந்தப் பாதிரியார் தன் விருப்பமின்றி 13 முறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எழுபத்தைந்து நாட்களைக் கடந்தும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லையென்பதால் அவர் இந்தியாவுக்கான வேட்டிகன் தூதருக்கும் இந்திய கத்தோலிக்கப் பேராயர்களின் கூட்டமைப்பின் தலைவருக்கும் மேலும் கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்களுக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் அந்தக் கன்னியாஸ்திரி.
 

"தனது பண பலத்தால் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார்" என்று குற்றம் சாட்டிய அவர், '5 கோடி கொடுக்கிறேன், என் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிடு' என்று பேரம் பேசுவதாகவும் பேராயர் ஃபிரான்கோ மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதில் சொன்ன பேராயர், தன் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும் அந்தக் கன்னியாஸ்திரியின் தவறான நடவடிக்கைக்காக அவரைக் கண்டித்ததால் தனக்கெதிராக ஆள் சேர்த்துக்கொண்டு சதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
 

கேரள கன்னியாஸ்திரிகள் அமைப்பும் பேராயருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தது. இதனிடையே போலீஸ் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், 'உடனடி கைது நடவடிக்கையை விட, இறுதித் தீர்ப்பே முக்கியம்' என்றும் கூறியது. இந்நிலையில் ஜலந்தர் 'மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ்' சபை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறது. 
 

இந்நிலையில் கன்னியாஸ்திரிகளின் போராட்டம் தொடர, பேராயர் ஃபிரான்கோ பதவி விலகியுள்ளார். மேலும், விரைவில் விசாரணைக்காக கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்