Skip to main content

ராகுலை தொடர்ந்து இன்று சோனியாவை சந்திக்கிறார் கமல்ஹாசன்! - கூட்டணி பேச்சுவார்த்தையா?

Published on 21/06/2018 | Edited on 21/06/2018


நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

 

 

அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, தேர்தல் ஆணைய அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மனு அளித்தார்.

அதன்பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘அரசியல் குறித்து பேசினோம். ஆனால் கூட்டணி குறித்து பேசவில்லை’ என்றார். இதேபோல், சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் கமல்ஹாசனும் இணைய முயற்சிக்கிறாரா, அதற்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையா இந்த சந்திப்பு என தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், நேற்று ராகுலை சந்தித்த கமல்ஹாசன் இன்று காலை 11.00 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்.

சார்ந்த செய்திகள்