Skip to main content

பா.ஜ.க. ஆட்சியில் முறைகேடு; மேனாள் நீதிபதி டி. குன்ஹா தலைமையில் ஆணையம்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Justice D. Cunha headed by the commission about Malpractice in BJP government

 

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதேபோல், 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனாவை தடுக்கும் வகையில் முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அப்போதைய பா.ஜ.க அரசு வழங்கியது. அப்போது வழங்கப்பட்ட உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கியதில் சுகாதாரத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். 

 

இந்த நிலையில், அந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கர்நாடகா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை ஆணையம், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, கடந்த பா.ஜ.க ஆட்சியில் சுகாதாரத்துறையில் நடைபெற்ற வரவு, செலவு சம்பந்தப்பட்ட தகவல்களில் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக சட்டப்பேரவை பொது தணிக்கை குழு கர்நாடகா அரசிடம் தெரிவித்தது. அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா விசாரணை ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்துக்குத் தேவையான தகவல்கள், ஆவணங்கள் வழங்க வேண்டும் எனவும், அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறைக்கு கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில் அவர்கள் விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்றும், அவருக்கு ரூ. 100 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளித்தவர் ஜான் மைக்கேல் டி. குன்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.