Skip to main content

எல்லை பிரச்சனை; இந்தியா - சீனா நாளை பேச்சுவார்த்தை!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

india china

 

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாக சீனா கூறியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகளில் படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டு அவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் இந்தியா - சீனா இடையிலான 13 வது கட்ட பேச்சுவார்த்தை, நாளை காலை 10 மணியளவில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ என்னும் இடத்தில் நடைபெறும் என்றும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்குவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இடையில் விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே, இந்தியா டுடே கான்கிளேவில் இன்று சீனா எல்லையில் படைகளைக் குவித்து வருவதும், அப்படைகளைத் தொடர்ந்து எல்லையில் வைத்திருக்க புதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் கவலைக்குரிய விஷயம் என்றும், சீனா படைகளைக் குவித்துள்ள வரை இந்தியாவையும் எல்லையில் படைகளைக் குவித்திருக்கும் எனக் கூறியுள்ள நிலையில் இந்தியா - சீனா நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்