Skip to main content

“மக்களிடம் அச்சத்தை உருவாக்கவே இது கொண்டு வரப்பட்டுள்ளது” - அமித்ஷா பேச்சு 

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

nn

 

மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

 

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது பேசுகையில், “2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி திகழ்கிறார். ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ளோம். இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களிடம் அச்சத்தை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

 

நரசிம்ம ராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதாயத்தைக் காட்டியே காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. நரசிம்ம ராவ் அரசை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரிக்க லஞ்சம் பெற்ற முக்தி மோர்ச்சாவினர் சிறை சென்றனர். மன்மோகன் சிங் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சந்தித்தபோது, லஞ்சப் பணம் கொண்டுவரப்பட்டது. ஒரே ஒரு வாக்கில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஆட்சியமைத்தார் வாஜ்பாய். அவர் லஞ்சம் மூலம் அரசை காக்க முயற்சி செய்யவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

மக்களிடம் ஒரு மாயையை உருவாக்கவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியில் 11 கோடி கழிப்பறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்கத் தொடங்கினார்கள். அரசியல் உள்நோக்கங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்