Skip to main content

சத்யபால் மாலிக் கைது? டெல்லி போலீசார் விளக்கம்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

former jammu and kashmir sathyapal malik related police incident

 

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காகத்தான் பழைய வழக்கில் மீண்டும் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர்.

 

அண்மையில் சத்யபால் மாலிக், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

 

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சத்யபாலுக்கு சிபிஐ  சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சத்யபால் மாலிக்  ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் நேற்று முதல் குவிந்து வந்தனர். மேலும் சத்யபாலுக்கு தங்களை ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள அவர் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். இவ்வாறு அனுமதியின்றி கூடியவர்களை போலீசார் டெல்லி ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 

இதனையடுத்து சத்யபால் மாலிக் காவல் நிலையம் சென்றார். அப்போது சத்யபால் மாலிக் உட்பட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்த தகவல் பரவத் தொடங்கிய நிலையில் சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து டெல்லி போலீசார் தரப்பில் கூறுகையில், "சத்யபால் மாலிக் அவராகவே காவல் நிலையம் வந்தடைந்தார். போலீசார் அவரை கைது செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்