Skip to main content

"விரைவில் மூன்றாவது அலை தாக்கும்... இந்த இடங்களிலெல்லாம் மினி ஊரடங்கு தேவை" - எய்ம்ஸ் இயக்குநர்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

aiims director

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா விரைவில் மூன்றாவது அலை ஏற்படுமென தெரிவித்துள்ளார். மேலும், மினி ஊரடங்கு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "நாம் தளர்வுகள் அளிக்க தொடங்கியவுடன், மீண்டும் கரோனா தடுப்பு நடைமுறைகள் குறைந்துவருகின்றன. முதல் மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் என்ன நடந்தது  என்பதிலிருந்து நாம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் கூட்டங்கள் கூடுகின்றன. மக்கள் கூடிவருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரிக்க சிறிது நேரம் எடுக்கும். மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது. அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அது நாட்டைத் தாக்கும். அதற்கு சில காலம் கழித்தும் நாட்டை தாக்கலாம். ஆனால் இது, நாம் எப்படி கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம், கூட்டங்களை எவ்வாறு தவிர்க்கிறோம் என்பதைப் பொறுத்தது" என தெரிவித்துள்ளார்.

 

கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய  ரன்தீப் குலேரியா, "அது (தடுப்பூசி செலுத்துவது) முக்கிய சவால். ஒரு புதிய அலை உருவாக  மூன்று மாதங்கள் வரை ஆகலாம், ஆனால் இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து அதற்கு முன்பாகவே ஏற்படலாம். கரோனா பாதுகாப்பு நடைமுறையைத் தவிர, கடுமையான கண்காணிப்பையும் உறுதி செய்ய வேண்டும். கடந்த முறை, நாம் ஒரு மரபணு மாற்றமடைந்த கரோனாவைக் கண்டோம். வெளியிலிருந்து வந்து இங்கு வளர்ச்சி பெற்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. வைரஸ் தொடர்ந்து உருமாறும் என்பதை நாம் அறிவோம். கரோனா ஹாட்ஸ்பாட்களில் தீவிர  கண்காணிப்பு தேவை" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "கரோனா உறுதியாகும் சதவீதம் 5க்கு மேல் அதிகரிக்கும் அனைத்து இடங்களிலும் சிறிய அளவிலான ஊரடங்கு தேவை. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையென்றால்வரும் மாதங்களில் நாம் எளிதாக இலக்காவோம்" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்