Skip to main content

வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினை - அறிக்கை தாக்கல் செய்த மூவர் குழு!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

supreme court

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் ஆகியவற்றை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை வீட்டிற்கு திரும்பப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இன்றோடு 126வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏப்ரல் ஐந்தாம் தேதி, நாடு முழுவதுமுள்ள இந்திய உணவு கழகத்தின் அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, வேளாண் சட்டங்கள் குறித்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்தது. மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் கன்வத் ஆகியோர் இடம்பெற்ற நால்வர் குழுவை அமைத்தது. ஆனால் பாரதிய கிசான் சங்கத் தலைவர் பூபிந்தர் சிங் மன், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அக்குழுவிலிருந்து விலகினார்.

 

இந்தநிலையில், மூன்று பேரோடு இயங்கி வந்த இந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (31.03.2021) முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், சுமார் 85 விவசாய சங்கங்களிடம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு, வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டுள்ளது என அக்குழு கூறியுள்ளது.

 

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கும்போது, விவசாயிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இக்குழுவிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்