Skip to main content

குடியுரிமைச் சட்ட நகலுக்கு பாகிஸ்தான் இந்துக்களும் எதிர்ப்பு!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், ஜெயின்கள் ஆகிய மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியது.

CITIZENSHIP AMENDMENT BILL 2019 AGAINST PAKISTAN HINDUS

இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவும், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளை தவிர்த்திருப்பதாகவும் கடும் விமர்சனம் எழுந்தது. இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றும் முயற்சியாகவே இந்த சட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.
 

இந்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் தொடர்கின்றன. மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களும் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

AMIT

இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்தவே இந்தச் சட்டம் துணைபோகும். பாகிஸ்தானில் வசிக்கும் ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். உண்மையான ஹிந்துக்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். இந்தச் சட்டம் இந்தியாவின் சொந்த அரசியல் சட்டத்தையே மீறுகிறது என்று பாகிஸ்தான் ஹிந்து கவுன்சிலின் முன்னோடி தலைவர் ராஜா அஸார் மங்லானி தெரிவித்துள்ளார்.
 

பாஜக அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம், ஒரு நாட்டில் வசிக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை ஒருவருக்கொருவர் எதிரியாக பாவிக்கவே வகை செய்யும் என்று அன்வர் லால் டீன் என்ற பாகிஸ்தான் மேலவையின் கிறிஸ்தவ உறுப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் மனித உரிமைகளை மீறியது என்றும், இதை அடியோடு நிராகரிப்பதாகவும் பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவர் கூறியுள்ளார்.
 

பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கிய சமூகத்தவரும் இந்தச் சட்டத்தை நிராகரித்துள்ளனர். பாகிஸ்தான் சீக்கியர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வசிக்கும் ஒட்டுமொத்த சீக்கியர்களும் இதை எதிர்க்கிறார்கள் என்று பாபா குருநானக் என்ற அமைப்பின் தலைவர் கோபால் சிங் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்