Skip to main content

"உடனடியாக விதிகளுக்கு இணங்காவிட்டால்" - ட்விட்டருக்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

IT MINISTER

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது. இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த 26 ஆம் தேதியோடு முடிவடைந்தது.

 

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ட்விட்டர் நிறுவனம் மட்டும் விதிகளை முழுமையாக ஏற்கவில்லை. சமூகவலைதளங்கள், தலைமை இணக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். நிறுவன ஊழியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்க வேண்டும். நோடல் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்றாகும். இதில் ட்விட்டர் இன்னும் தலைமை இணக்க அதிகாரியை நியமிக்கவில்லை.

 

இந்தநிலையில் புதிய விதிமுறைகளுக்கு இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு, இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ட்விட்டர் விதிமுறைகளுக்கு உடன்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், "அமைச்சகத்தின் கடிதங்களுக்கு நீங்கள் அளித்த பதில்களில், அமைச்சகம் கோரிய தெளிவுபடுத்துதல்களும் இல்லை, விதிமுறைகளுக்கு இணங்குவது தொடர்பான அறிகுறிகளும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. விதிகளின் கீழ் தேவையான தலைமை இணக்க அதிகாரியின் விவரங்களைப் பற்றி ட்விட்டர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது உங்கள் பதில்களிலிருந்து தெளிவாகிறது. நல்லெண்ண நடவடிக்கையாக, விதிகளுக்கு உடனடியாக இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒரு கடைசி அறிவிப்பு வழங்கப்படுகிறது. இணங்கத் தவறினால், 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.டி சட்டத்தின் 79 ஆம் பிரிவின் கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் விலக்கு திரும்ப பெறப்படும். மேலும் தண்டனை சட்டம் பாயும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.டி சட்டம் 2000-த்தின் 79 ஆம் பிரிவின்படி, பயனர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூகவலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஒருவேளை இந்த சட்ட பாதுகாப்பு ட்விட்டர் நிறுவனத்திடமிருந்து பறிக்கப்பட்டால், பயனர்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு ட்விட்டர் நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். 

 

 

சார்ந்த செய்திகள்