Skip to main content

திருநள்ளாறு அர்ச்சகருக்கே விபூதி அடித்த இருவர்; 10 மாதங்களுக்குப் பிறகு சிக்கி சிறை!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Burglary at Tirunallaru priest's house; After 10 months, two people were caught

சனி பகவான் கோவிலுக்குப் பெயர் போன திருநள்ளாற்றில், அர்ச்சகர் வீட்டில் தங்கியிருந்த இரண்டு நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோவில். திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநள்ளாறு கோவிலில் 40 ஆண்டுகளாக அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 21/04/2023 ஆம் தேதி அர்ச்சகர் ரோகிணி இடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வெங்கடேஷ் என்ற நபரும், ஒரு பெண்மணியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

நீங்கள் பூஜை செய்துதான் கடந்த ஆண்டு எங்களுடைய மகளுக்குத் திருமணம் நடைபெற்றது என்ற இருவர், இந்த வருடம் தன் மகனுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் அதற்காகப் பரிகார பூஜைகளை செய்து தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். இதை நம்பிய ரோகிணி, அவர்களை நாளை காலை வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இங்கு தங்க அறை கிடைக்கவில்லை என்பதால் உங்கள் வீட்டில் நாங்கள் தங்கிக் கொள்கிறோம். நாளை காலை பூஜை முடித்துக் கொண்டு நாங்கள் சென்று விடுவோம் எனத் தெரிவித்தனர்.

அதை நம்பிய அர்ச்சகர், அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்த பொழுது வீட்டில் இருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளார். அப்பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை அடுத்து போலீசார் இரண்டு பேரையும் தேடி வந்தனர். கடந்த 10 மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில், சிசிடிசி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சுபலட்சமி, வேலாயுதம் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தாய், மகன் இல்லை மாமியார் மருமகன் என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று ஹோட்டல் உணவில் மயக்க மருந்தை போட்டு அர்ச்சகர் ரோகிணிக்கும் அவரது மனைவிக்கும் கொடுத்த இவர்கள், இருவரும் மயங்கிய நேரத்தில் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்ட நிலையில் இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்