Skip to main content

நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

KANIMOZHI

 

பெண்களின் குறைந்த பட்ச திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.

 

இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மசோதா தாக்கலைத் தொடர்ந்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, "அவசரமாக வேலை செய்யும்போது தவறுகள் நடக்கும் என்று அரசுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். இந்தியாவில் இதுதொடர்பாக (பெண்களின் திருமண வயதை உயர்த்துவது) பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு எந்த பங்குதாரர்களுடனும் பேசவில்லை. எந்த மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தவுமில்லை. இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோருகிறோம்" எனத் தெரிவித்தார்.

 

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், "அவசர அவசரமாக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதை நான் எதிர்க்கிறேன். இந்த மசோதா குறித்து அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதம் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்த மசோதாவை முற்றிலும் எதிர்க்கிறார்கள்" என்றார்.

 

ஒவைஸி பேசுகையில், "இது பிற்போக்கான திருத்தம். இது சட்டப்பிரிவு 19 இன் கீழ் சுதந்திரத்திற்கான உரிமைக்கு எதிராகவுள்ளது. 18 வயதுடையவர் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம், லிவ்-இன் உறவில் ஈடுபடலாம். ஆனால் திருமணத்திற்கான உரிமையை நீங்கள் மறுக்கிறீர்கள். 18 வயதுடையோருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? சோமாலியாவை விட இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவு" எனக் கூறினார்.

 

தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, "தொடர்ந்து 2வது அல்லது 3வது முறையாக, அவர்கள் (அரசு) தீவிரமாக மசோதாக்களைக் கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகளில் யாரிடமும் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. அலுவல் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்படும் எதுவும் அவையில் ஒருபோதும் செயல்படுத்தப்படுவதில்லை. அரசின் இந்த புதிய நடைமுறையை நான் கண்டிக்க விரும்புகிறேன்" என்றார்.

 

அதே திமுக எம்.பி கனிமொழி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தவிர்த்து, மற்ற எதற்கும் யாரையும் கலந்தாலோசிப்பதில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய முக்கியமான மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கோ அல்லது தேர்வுக் குழுவுக்கோ அனுப்பப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. அவர்கள் மசோதாவை மறுபரிசீலனை செய்து சிவில் சமூகத்தில் கருத்துக்களைக் கேட்டு பின்னர் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு மக்களவை சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021 நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்