Skip to main content

"எங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுங்கள்" - உக்ரைனில் இறந்த பஞ்சாப் மாணவரின் பெற்றோர் கோரிக்கை

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

பக

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவரும் இந்திய அரசு, ஆப்ரேஷன் கங்கா மூலம் அவர்களைத் தாயகம் அழைத்துவருவதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்துவருகிறது.

 

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான இந்தப் போரில் நேற்று இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் கார்கிவ் நகரில் நடந்த குண்டுவீச்சில் பலியாகியுள்ளார். அவர் கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில் நிலையம் சென்றபோது இந்தக் குண்டுவீச்சில் சிக்கிப் பலியானதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, தற்போது மற்றொரு மாணவர் உடல்நலக்குறைவு காரணமாக வின்னிட்சியா மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த சந்தன் என்ற மாணவன் பக்கவாதம் ஏற்பட்டுக் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறுதிச் சடங்கிற்காகத் தனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு மத்திய அரசுக்கு சந்தனின் பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று குண்டுவீச்சில் ஒரு இந்திய மாணவர்கள் பலியான நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக மற்றொரு இந்திய மாணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா, ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.  கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பபாயி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்