Skip to main content

"இந்த மூன்று பிரச்சனைகள் தேர்தலில் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கும்" - அகிலேஷ் யாதவ்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

akilesh yadav

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக விஜய ரத யாத்திரையை நடத்திவருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜான்சியில் நடைபெற்ற விஜய ரத யாத்திரை கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவதுதான் பாஜகவிற்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி என விமர்சித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "அவர்களுக்கு (பாஜக) ஒருவகையான வளர்ச்சி மட்டுமே தெரியும். அது நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை மாற்றுவது. அவர் (யோகி ஆதித்யநாத்) இங்கு வந்திருந்தால், சிர்கானின் பெயரும் மாறியிருக்கும். அவர் உள்கட்டமைப்பு, மேம்பாடு தொடர்பான போலியான புகைப்படங்களை வெளியிடுகிறார். எங்கள் வளர்ச்சிப் பணிகளைத் துவக்கிவைத்துக்கொண்டிருக்கிறார்" என கூறியுள்ளார்.

 

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "பாஜகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் வருமானம் குறைந்தது ஆகிய பிரச்சனைகள், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் தலைவிதியைத் தீர்மானிக்கும். சமாஜ்வாடி கட்சியால் 22 மாதங்களில் விரைவுச் சாலையை அமைக்க முடியுமென்றால், பாஜக அதே பணியை செய்ய ஏன் 4.5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது? உத்தரப்பிரதேச மக்களின் நலனுக்காக அவர்கள் உழைக்க விரும்பாததே இதற்குக் காரணம். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசுக்கு 0 இடங்கள்தான் கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்