Skip to main content

"சைக்கிள் நிற்காது.. அதன் வேகம் குறையாது" - வருமானவரித்துறை சோதனை குறித்து அகிலேஷ் யாதவ் ஆவேசம்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

akhilesh yadav

 

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், தற்போதிலிருந்தே அம்மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

 

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ராஜீவ் ராய், அகிலேஷ் யாதவின் தனிப்பட்டச் செயலாளர் ஜெய்னேந்திர யாதவ், சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனோஜ் யாதவ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று (18.12.2021) காலை வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

 

இந்நிலையில் அகிலேஷ் யாதவ், தேர்தலின் காரணமாகவே  தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாகவும், இதனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் நெருங்கும்போது.. இதெல்லாம் நடைபெற தொடங்கும் என மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறேன். இப்போதே வருமான வரித்துறை வந்துவிட்டது... (அடுத்ததாக) அமலாக்கத்துறை வரும், சிபிஐ வரும். ஆனால் சைக்கிள் (சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம்) நிற்காது... அதன் வேகம் குறையாது.. உத்தரப்பிரதேசத்திலிருந்து பாஜக துடைத்தெறியப்படும். மாநில மக்களை ஏமாற்ற முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பு ராஜீவ் ராய் மீது சோதனை நடத்தப்படவில்லை. இப்போது ஏன் சோதனை செய்யப்படுகிறது? தேர்தல் நெருங்கிவிட்டது என்பதாலா?

 

காங்கிரஸின் பாதையில் பாஜக பயணிக்கிறது. முன்பு காங்கிரஸ் யாரையும் பயமுறுத்த விரும்பினால், அவர்கள் இதுபோன்ற யுக்தியைப் பயன்படுத்துவார்கள். பாஜக, காங்கிரஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது. இந்த சோதனைகள் ஏன் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படுகிறது? தேர்தல் போரில் வருமானவரித்துறையும் சேர்ந்துள்ளது போல் தெரிகிறது.” இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்