மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சாலை மேம்பாடு தொடர்பான 16வது ஆண்டு மாநாட்டில் நேற்று (09.07.2021) கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் 2024ஆம் ஆண்டுக்குள் 60,000 கிலோமீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரி, "இந்தியாவில் 63 லட்ச கிலோமீட்டருக்கு சாலை அமைப்பு உள்ளது. இது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை அமைப்பாகும். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் (என்ஐபி) திட்டத்தின் மூலம் 1.4 டிரில்லியன் டாலர்களை (ரூ. 111 லட்சம் கோடி) முதலீடு செய்கிறது. மத்திய அரசு, மூலதன செலவை இந்த ஆண்டு 34 சதவீதம் வரை, 55.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "ஒருநாளைக்கு 40 கிமீ என்ற விகிதத்தில், 2024ஆம் ஆண்டிற்குள் 60,000 கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதே எனது இலக்கு" என தெரிவித்துள்ளார்.