Skip to main content

ரஜினியின் பேச்சு பாஜகவின் குரலா அல்லது அதிமுகவின் குரலா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018


ரஜினியின் பேச்சு பாஜகவா அல்லது அதிமுகவின் குரலா? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,

ரஜினிகாந்த் பேசியதை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பி.ஜே.பி. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்தக் குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே, தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்தத் தீவிரவாதிகள் யார் என்பதை அவர் நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுமட்டுமல்ல, வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டமில்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி, எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்ப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்