Skip to main content

பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

VP Duraisamy bjp join


தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி. 
 


தி.மு.க. தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அதிருப்தியில் இருந்தார் வி.பி.துரைசாமி. இந்த நிலையில், சமீபத்தில் பா.ஜ.க.வின் தலைமையகமான கமலாலயத்திற்குச் சென்று பா.ஜ.க. தலைவர் முருகனைச் சந்தித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரசியல் ரீதியாக விவாதித்தனர். (இவர்களது சந்திப்பின் ரகசியங்கள் குறித்து நமது நக்கீரன் ராங்கால் பகுதியில் பதிவு செய்துள்ளோம்).
 

இந்தச் சூழலில், பா.ஜ.க. தலைவர் முருகனைச் சந்தித்து அவர் பேசியதை அறிந்து தி.மு.க. தலைமை கோபம் கொண்டது. அவரிடம் ஸ்டாலின் தரப்பில் பேசிய போதும், முறையான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் தனது அதிருப்தியை தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் பலரிடமும் வெளிப்படுத்தியிருக்கிறார் வி.பி.துரைசாமி. இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வில் அவர் இணைய விரும்பியதை தி.மு.க. தலைமை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக துணைப்பொதுச் செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.யை நியமித்திருக்கிறது அறிவாலயம்.
 

 

கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, விரைவில் பா.ஜ.க.வில் இணையவுள்ளார் என்று நேற்று நக்கீரன் இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் இன்று காலை தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி. 
 

வி.பி.துரைசாமிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன தமிழக பா.ஜ.க. வட்டாரம்.
 

 

 

சார்ந்த செய்திகள்