Skip to main content

கைநழுவும் முதல்வர் பதவி... பிரதமர் மோடியின் உதவியை நாடிய உத்தவ் தாக்கரே...

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

uddhav thackeray seeks help from modi

 

மஹாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்ட்ரா முதல்வராகப் பொறுப்பேற்றார்.


சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத உத்தவ் தாக்கரே, நேரடியாக முதல்வர் ஆனதால், அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற சூழல் உருவானது. அம்மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதால், அதில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகத் திட்டமிட்டிருந்தார் உத்தவ் தாக்கரே. இதற்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தற்போது இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழலில், ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், மேலவை உறுப்பினராக முடிவெடுத்த உத்தவ் தாக்கரே அதற்கான அமைச்சரவை பரிந்துரையையும் ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து இதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. இதுவரை இருமுறை ஆளுநருக்கு இதுகுறித்த பரிந்துரை அனுப்பப்பட்டு, ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
 

http://onelink.to/nknapp



இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குற்றம்சாட்டும் சிவசேனா, ஆட்சியமைக்க முடியாத கோபத்தில் பாஜக இவ்வாறு செய்கிறது எனக் கூறிவருகிறது. இந்நிலையில் விரைவில் எம்.எல்.சி யாக பதவியேற்றே ஆகவேண்டும் என்ற சூழலில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் உதவியை உத்தவ் தாக்கரே நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, கரோனாவால் மகாராஷ்டிராவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு ஆளுநரை உடனடியாக முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும் என சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்