Skip to main content

’’சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் முயலலாம்’’- விஜயகாந்த் பேச்சு

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

 

dmdk


      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில்   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடந்தது.

 

     போராட்டத்தில்  விஜயகாந்தின்  மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனரும், துணை பொதுச்செயலாளருமான சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 
போராட்டத்தில் பேசிய  பிரேமலதா ,’’ தமிழக மக்கள் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளே முதலாளிகள். எத்தனை கோடிகள் பணம் இருந்தாலும், தட்டில் சோறு இருந்தால் தான் உண்ணமுடியும். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் விவசாய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

dmdk1

 

நமது நாடு எவ்வளவு முன்னேறியது என்பதை, நமது நாட்டு விவசாயிகளின் முன்னேற்றத்தின் மூலமே அறியலாம். எனவே விவசாயிகளின் பாதுகாவலான, உற்ற நண்பனாக தேமுதிக விளங்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடுவை மத்திய அரசு  புறக்கணித்துவிட்டது. கர்நாடக தேர்தலை முன்னிட்டு காலம் தாழ்த்தும் மத்திய அரசின் செயலை தேமுதிக கண்டிக்கிறது. ஸ்கீம் என்ற வார்த்தையால் விவசாயிகளின் வாழ்க்கையை ஸ்கிப் செய்து விட்டது மத்திய அரசு.

 

       750 கிமீ தூரத்திற்கு மேல் காவிரி செல்கிறது. அந்த நதியை நம்பியே விவசாயம், குடிநீர், பல்வேறு தொழில்கள்  உள்ளது. சம்பா, குறுவை, தாளடி என பயிரிடப்பட்ட டெல்டா பகுதி தற்போது வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு திமுகவும், அதிமுகவுமே தான்  காரணம். 

 

      1 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.  விவசாயத்தையும், நெசவு தொழிலையும் சீர்படுத்தினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் விவசாயிகள் பயனடையும் வகையில் 100 நாள் வேலையை மாற்றி அமைக்க வேண்டும். யானை கட்டி போரடித்த டெல்டா பகுதி, யானைக்கு சோறிட முடியாமல் தவிக்கிறது. நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தை வளப்படுத்தலாம். ரூ.10 ஆயிரம் கோடி இருந்தால் நதிகள் இணைப்பு சாத்தியம். வளமான தமிழகம் அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’  என்றார். 

 

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், ‘’ விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன என்பதனை மக்கள் உணர வேண்டும். காவிரி பிரச்னையில் திமுக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க முயலலாமே.  காவிரி விவகாரத்தில் அனைவரும் கபடநாடகம் ஆடுகின்றனர். விவசாயிகள் பிரச்னை தீர காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்’’  என்றார் கரகரத்தக்குரலில்.
 

சார்ந்த செய்திகள்