Skip to main content

’போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்’ ரஜினியின் பேச்சு - தலைவர்கள் கருத்து!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018
leaders


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர் என அவர் கூறியிருந்தார்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது.. போராட்டத்தை சமூகவிரோதிகள் தான் உள்ளே புகுந்து கெடுத்தனர் எனக்கு அது தெரியும். ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ. அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள்.

இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்பு தான். சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. காவல்துறையை யூனிபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஆவேசமடைந்தார். மக்கள் போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றார். ரஜினியின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஜினியின் கருத்து குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது,

வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)

போராட்டத்தினுடைய வடிவம் சமீப காலமாக வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு திசையை நோக்கி சென்றது. காவிரி போராட்டமும் வேறு விதமாக நகர்ந்தது.

இதேபோலத்தான் ஸ்டெர்லைட் போராட்டமும். போராட்டம் வேறு திசை நோக்கி சென்றதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார். டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.)

போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். அப்பாவி மக்களை கொன்றது ஏன்? இறந்துபோன 13 பேரில் சமூக விரோதிகள் யார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை விட்டுவிட்டு போலீசார் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு சமூகவிரோதிகளையும், பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை. ரஜினிகாந்துக்கு வந்த தகவல்படி அவர் கூறியிருக்கலாம். ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.)

இந்த போராட்டம் பயங்கரமாக மாறியது பயங்கரவாதிகளால் தான். பஸ்களுக்கு தீ வைப்பது, கல் எறிவது போன்றவை பொதுமக்களின் எண்ணம் கிடையாது. ஆகவே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள். போராட்டம் எந்த திசையை நோக்கி திரும்பியது என்று பார்த்தாலே அங்கு சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)

தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் பிரவேசமும், அவருடைய கருத்துகளும் மர்மமாக இருக்கின்றன. எந்த கருத்துகளை பரப்புவதற்கு அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஒரு நாள் கூட அங்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து, அதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள ரஜினிகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் புரட்சிக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

ஜி.கே.வாசன் (த.மா.கா.)

மக்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதகமாக இருக்கிற திட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்க நினைத்தால் அநீதி. அந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்டம் அவசியம். போராடுபவர்கள் வன் முறைக்கு காரணமானவர்கள் கிடையாது. அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுகிறது என்றால், யார் காரணம்? ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதற்கு அரசு தான் பொறுப்பு. அப்பாவி மக்கள் அல்ல.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)

பொதுமக்களின் போராட்டத்தை ரஜினிகாந்த் வலதுசாரி பார்வையில் இருந்து பார்த்திருக்கிறார். அவர் ஆட்சியாளர்களை பாதுகாக்கவேண்டும். போலீசாரை பாதுகாக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் எடுத்த முடிவு சரிதான் என்ற நிலைபாட்டில் முன்கூட்டியே அவர் எடுத்த முடிவின்படி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்களோடு நின்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)

போராட்டம் நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது? என்பதை ரஜினிகாந்த் முதலில் பார்க்கவேண்டும். வேண்டும் என்றே யாரும் போராடவில்லை. மக்கள் நடத்திய போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் தவறான முறையில் போலீசாரை வழிநடத்திய அரசை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடைய கருத்து இல்லை.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)

தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய நியாயமான போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று ரஜினிகாந்த் அடையாளப்படுத்துவது கண்டனத்துக்குரியது. போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காமல் அதை நியாயப்படுத்துகிறவராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று அவர் சொல்லி இருப்பது, போராடுகிற மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

போராட்டம் ஏன் உருவாகுகிறது என்ற அடிப்படை கூட அறியாதவராக இருப்பது, ரஜினிகாந்த் அரசியலில் தான் உடனடியாக பதவி மாடத்தில் ஏறி அமர வேண்டும் என்ற ஆசையை மட்டும் தேக்கி வைத்திருக்கிறார். தூத்துக்குடி போராட்டகாரர்கள் விஷ கிருமிகள் தான் காரணம் என்றோ, சமூக விரோதிகள் தான் என்றோ பேசுவது அறியாமையின் உச்சம். மவுனமாக இருக்கும் போது மிகப்பெரிய அறிவாளியாக தோன்றுகிறார். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய உண்மை அடையாளம் வெளிப்படுகிறது. அவர் நிறைய பேசட்டும். மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)

மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் குரலை ரஜினிகாந்த் எதிரொலித்து வருகிறார். பா.ஜ.க. அனுப்பிய தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் முகவர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மனிதநேய ஜனநாயக கட்சி)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் குற்றம் சாட்டி இருப்பதை கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்