Skip to main content

கர்நாடகாதான் பெரியார் மண்; தமிழகம் பெரியாழ்வார் மண்! - எச்.ராஜா பேட்டி

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

 

raja


மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.   அப்போது அவர் இந்து அறநிலையத்துறை குறித்தும், கி.வீரமணி குறித்தும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.  பெரியார் - பெரியாழ்வார் குறித்த தமிழிசையின் கருத்துக்கும் பதிலளித்தார்.


அவர்,  ‘’ஐம்பது ஆண்டுகள் கழகங்கள் ஆட்சியில் கோவில்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறி உள்ளது. உண்மையாகவே பார்த்தால் பராசக்தி வசனம் இப்போதுதான் பொருந்தும்.  லட்சக்கணக்கான இந்து கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சூரையாடப் பட்டிருக்கின்றன.  

 

இந்து அறநிலையத்துறை என்பது இந்து அறம் அழிக்கும் துறையாக உள்ளது.  திமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் சொத்துக்கள் குறித்து என்னிடம் புகார்கள் வந்துள்ளன.  கோவில்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கதக்கது. 6 வார காலத்திற்குள் இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்கவேண்டும்.  குத்தகை, வாடகை தராதவர்களிடம் இருந்து மீட்டு சந்தை மதிப்பிலே அவை வாடகைக்கு விடப்பட வேண்டும் என்று தீர்ப்பு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. பக்தர்கள் போர்க்கால அடிப்படையில் கோவில் சொத்துக்கள் குறித்த தகவல்களை கொடுக்க வேண்டும்.

 

    தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருந்தால் இந்து கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும்.  திமுக - திகவினர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.  இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.           தமிழகத்தில் மதசார்பின்மைக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை.    கோயிலுக்குள் அறநிலையத் துறை அலுவலகம் வைக்க கூடாது .  2016ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுற்றுலாத் துறை சார்பில் 14 கோடி ஒதுக்கப்பட்டது. இது பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது. 

 

மீனாட்சியம்மன் கோவில், பழனி கோவில் பெயரில் தொலைக்காட்சி துவங்கப்பட வேண்டும் , தமிழக கோவில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்.’’என்று கூறினார்.

 

அவர் மேலும்,  மாமன்னர் இராஜராஜ சோழனை முட்டாள் ராஜா என்றும் வெங்காயம் என்றும்  பேசிய கி.வீரமணியை வன்மையாக கண்டிக்கிறேன்.  ராஜராஜ சோழன் கட்டிய கோவில் எப்படி உள்ளது, இவர்கள் கட்டிய சமத்துவபுரம் எப்படி பல்லிளிக்கிறது.  

 

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவரும் தெற்காசிய நாடுகள் முழுவதும் தங்கள் ஆளூமையின் கீழ் வைத்திருந்தார்கள்.  அதனால்தான் சமீபத்திய மோடி சர்க்கார் கூட ராஜேந்திர சோழனின் தபால் தலை வெளியிட்டது.   அவர் பெயரை கப்பல் படைக்கு வைத்தார்கள்.   இந்த உலகத்திலேயே முதன் முதலில் கப்பல்படையை நிறுவிய மன்னன் ராஜேந்திரசோழன். அப்படிப்பட்ட மாமன்னரை குப்பை அமைப்பை சேர்ந்த கி.வீரமணி என்ற நபர் முட்டாள் ராஜா என்று சொல்லியிருக்கிறார்.  தன் சொத்தையெல்லாம் மனிதத்திற்கும் மதத்திற்கும் கொடுத்தவர் ராஜராஜ சோழன்.  நான் பகிரங்கமாகவே சொல்கிறேன்...  கி.வீரமணியின் சொத்துக்களை சோதனையிட வேண்டிய காலம் வந்துவிட்டது.

 

இந்து சமுதாயம் வீதிக்கு வந்து இந்து ஆளுமைகளை இழிவுபடுத்துவதை தடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்’’என்றார்.  

 

 தமிழிசையின் கருத்து குறித்த கேள்விக்கு,  ‘’இது பெரியாழ்வார் மண் என்று தமிழிசை சரியாக சொல்லியிருக்கிறார். இது நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதரித்த பூமி.  தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது என்றெல்லாம் ஈவெரா பேசியிருப்பதால் தமிழ்நாடு ஈவெரா மண் அல்ல; கர்நாடகாவை வேண்டுமானால் இது ஈவெரா மண் என்று சொல்லிக்கொள்ளலாம். தமிழகத்தை இது பெரியாழ்வார் மண் என்று தமிழிசை சொன்னது மிக சரியான சாலப்பொருத்தமானது’’என்று பதிலளித்தார்.

 

படம் : ஷாகுல்

சார்ந்த செய்திகள்