Skip to main content

பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது: மு.க.ஸ்டாலின்

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
stalin


பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது என திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

செய்தியாளர்: திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ஸ்டாலின்: தந்தை பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

செய்தியாளர்: ஒரு புதிய கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் உங்களை தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி அவர்களுக்கு திமுக தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது? புதிய கூட்டணி இப்போது தேவையா?

ஸ்டாலின்: நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அப்போது எங்களுடைய உயர்மட்ட குழுவுடன் விவாதித்து, பதில் சொல்வதாக தெரிவித்து இருக்கிறேன்.

செய்தியாளர்: மூன்றாவது அணி அமைப்பது இப்போது தேவையா?

ஸ்டாலின்: திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், உயர்மட்ட குழுவிடம் விவாதித்து பதிலளிப்போம்.

செய்தியாளர்: தமிழகத்தில் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நான் போக்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழ்நாட்டு மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

செய்தியாளர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என நீங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்த நிலையில், 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை மத்திய அரசு அழைத்திருக்கிறதே?

ஸ்டாலின்:  நேற்று மாலை தமிழத்தின் துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, “வரும் 8 ஆம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9 ஆம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தை கூட்டலாமா?”, என்று கேட்டார். அவருக்கு பதிலளித்தபோது, “உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட 6 வாரகாலத்தில் ஏற்கனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காக செய்யப்படும் நாடகம் இது”, என்று நான் தெளிவாக குறிப்பிட்டேன். ஆனால் அவர், “இல்லை. 9 ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதை பார்த்து விட்டு சட்டமன்றத்தை கூட்டலாம்”, என்று தெரிவித்தார். அதனால் நான் ஏற்றுக் கொண்டேன்.

செய்தியாளர்: நான்கு மாநில பிரச்னையான காவேரி விவகாரத்தில், பிரதமர் கர்நாடகத்தில் பேசும்போது மட்டும் டாப் பிரையாரிட்டி என்று சொல்கிறார், ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவே மறுக்கிறாரே?

ஸ்டாலின்:  அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று திமுக தரப்பில் நாங்கள் தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுள்ள பிரதமர் தமிழ்நாட்டு மக்களின் நிலை பற்றி கவலைப்படவில்லை. நேற்று நான் தொலைபேசியில் பேசும்போதுகூட, “நிச்சயமாக அவர் நம்முடன் பேசுவதற்கு அழைக்கப்போவதில்லை”, என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதனால் தான், முதலமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, “சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்ற, ராஜ்யசபையின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்கை தெரிவியுங்கள்”, என்று வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்