Skip to main content

மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம்; கோவை, மதுரை செல்வோர் கவனத்திற்கு...

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
bjp

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28ம் தேதி தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதன் காரணமாக இரண்டு நாட்கள் அவர் செல்லும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு படை தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் இரு நாட்கள் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

nn

கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் அவிநாசி வழியாக செல்லலாம். பல்லடம் வழியாக மதுரை செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி, நால்ரோடு, உடுமலை வழியாக செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பல்லடம் வழியாக திருப்பூர் செல்லும் வாகனங்கள் நால்ரோடு, தாராபுரம் வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுரையிலும் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இன்றும் நாளையும் திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து தூத்துக்குடி விருதுநகர், நெல்லைக்கு செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும். சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களை சென்றடையும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்