கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குறுவை சாகுபடி உழவுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் களமிறங்கினர்.
இதனைத் தொடர்ந்து குமராட்சி ஒன்றியம் கண்டியாமேடு கிராமத்தில் வயல் வெளிக்கு நடுவே விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள குறைகளையும் தேவைகளையும் எடுத்துக் கூறினார்கள்.
அப்போது விவசாயிகள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள உரக் கிடங்கில் உரம் இருப்பு உள்ளது விவசாயிகள் நடவு பணிகளைச் செய்திட விவசாய டிராக்டர்கள் உள்ளது அதனை உழவன் செயலி மூலம் விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல் கரோனா காலங்களில் தற்போது நடவு பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வயல் வேலைகளைச் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில், வருகிற ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து வேளாண்துறை, டெல்டா மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் இருப்பு உள்ளிட்டவை விவசாயிகளுக்குத் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கரில் தற்போது பயிரிடப்பட்டுள்ளது. 17 ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால் அளவில் உள்ளது. விவசாயிகளுக்கு குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் நல்ல சாகுபடி செய்யவேண்டும். அதேபோல் வெட்டுக்கிளி காற்றின் திசை வேகத்தில் தான் செல்லும் என 'ஜோத்பூர் வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம்' தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் பஞ்சாப் மாநிலம் நோக்கித்தான் வெட்டுக்கிளிகள் செல்லும் தமிழகம் வர வாய்ப்பு இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இருந்தாலும் நமது முதலமைச்சர் அறிவுறுத்தல்படி ஜோத்பூர் எச்சரிக்கை மையத்தின் தொடர்பில் இருக்கிறோம் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம். உழவன் செயலி 6 லட்சம் விவசாயிகள் டவுன்லோட் செய்து வைத்துள்ளனர். இதில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ இருந்தாலே போதும் அதனை டவுன்லோட் செய்து தகவல்களை விவசாயிக்குத் தெரிவிக்கலாம். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள மானிய திட்டம், பயிர் காப்பீடு, உரம் இருப்பு, மழை பற்றிய வானிலை அறிக்கை உள்ளிட்டவற்றை இந்த உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார். காவேரி விவசாய சங்க வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், கிராம விவசாயிகள் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.