Skip to main content

  ’தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்’-எடப்பாடியுடனான சந்திப்பிற்கு பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 13/02/2018 | Edited on 13/02/2018


 

stalin dmk

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் , போக்குவரத்துக் கழகங்களை நஷ்டமின்றி செயல்படுத்தி, மக்களின் தலையில் இருந்து பேருந்து கட்டண உயர்வை என்ற சுமையை அகற்றுவது குறித்து, திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை, இன்று (13-02-2018) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார். இதுகுறித்து  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 
ஸ்டாலின்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர்  டி.ஆர்.பாலு  தலைமையில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்களான பொன்முடி,  கே.என்.நேரு மற்றும் தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர்  சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  செங்குட்டுவன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஏறக்குறைய இரண்டு வாரகாலம் ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வறிக்கையை இரு நாட்களுக்கு முன்பாக என்னிடத்தில் கொடுத்தனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து, அந்த ஆய்வறிக்கையை அளித்திருக்கிறோம். அந்த ஆய்வறிக்கையில் மொத்தம் 27 பரிந்துரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி செயல்பட்டால் மக்கள் தலையில் பேருந்து கட்டண உயர்வை சுமத்தும் அவசியம் ஏற்படாது என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். குறிப்பாக,

·         போக்குவரத்துக் கழகங்களை மக்களுக்கான சேவையாக கருதி, அவற்றில் ஏற்படும் நஷ்டம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.

·         தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மத்திய தொகுப்பு நிதியம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஒருங்கிணைப்பு ஆணையம் ஆகியவற்றை உருவாக்கி, போக்குவரத்துக் கழகங்களை சீரமைத்திட வேண்டும்.

·         மேலும், பெட்ரோல் – டீசல் மீது மத்திய – மாநில அரசுகள் விதித்து இருக்கின்ற கலால் மற்றும் மதிப்புக்கூட்டு வரிகள் அதிகமாக இருப்பதால், இரு அரசுகளும் அந்த வரிகளை ரத்து செய்து, 10 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக விதிக்க வேண்டும்.

·         அதேபோன்று, பயணிகள் ஓட்டுநர்கள் கண்டக்டர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து மாதந்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்த வேண்டும்.

·         பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளிட்ட 27 பரிந்துரைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லி, அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் முதலமைச்சரை சந்தித்த நேரத்தில், அங்கு போக்குவரத்துத் துறையின் அமைச்சரும் உடனிருந்தார். அதுமட்டுமல்ல, துணை முதலமைச்சரும், பல அமைச்சர்களும் அங்கு இருந்தனர். அவர்களிடமும் இந்த ஆய்வறிக்கையை வழங்கியிருக்கிறோம்.

 

 செய்தியாளர்: ஏற்கனவே திமுக போராட்டம் நடத்திய பிறகு ஒரு ரூபாய் குறைப்பதாக அறிவித்தார்கள், இப்போது அதுபோன்று உறுதி அளித்தார்களா?

ஸ்டாலின்: ஆய்வறிக்கையை வாங்கிக் கொண்டார்களே தவிர, எந்தவித உறுதிமொழியும் தரவில்லை.

 


செய்தியாளர்: ஆய்வறிக்கை கொடுத்த பிறகும் அரசு எதுவும் செய்யவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஸ்டாலின்: இன்று கண்டனக் கூட்டங்கள் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறுகின்றன. நிர்வாகம் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால் தான், எதிர் கட்சியான நாங்கள் நிர்வாகத்தை எப்படி சீரமைப்பது என்ற யோசனைகளை வழங்கியிருக்கிறோம். அதை படித்துப் பார்த்து, பரிந்துரைகளை நிறைவேற்ற முன் வந்தால் உள்ளபடியே நாங்கள் வரவேற்போம். ஒருவேளை, அலட்சியம் செய்தால், மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

செய்தியாளர்: இந்த ஆய்வறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க ஏதாவது ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறதா?

ஸ்டாலின்: பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டிக்கெட் அச்சடிப்பது, உதிரி பாகங்கள் வாங்குவது ஆகியவற்றில் கமிஷன் லஞ்சம் வாங்குவது போன்றவற்றை கட்டுப்படுத்தினாலே, கடன்சுமை குறையும்.


செய்தியாளர்: இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகும், திமுக தான் நஷ்டம் ஏற்படுத்தியது என அதிமுக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

ஸ்டாலின்: அவர்கள் செய்து வரும் தவறுகளை மூடி மறைப்பதற்காக அபாண்டமான, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதற்கான பதில்களை நாங்கள் தெளிவாக அளித்திருக்கிறோம். தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்திருக்கிறோம். நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

 

செய்தியாளர்: பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, இந்தப் பிரச்னை எழுப்பப்படுமா?

ஸ்டாலின்: நிச்சயமாக கேள்வி எழுப்புவோம். அதுமட்டுமல்ல, தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறந்திருப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்புவோம். எந்த அடிப்படையில் அந்தப் படம் திறக்கப்பட்டது? மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் படம் பாராளுமன்றத்தில் திறக்கப்படவில்லையா?, என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுவொரு அபத்தமான கேள்வி. இந்தப் படத்திறப்பு விழாவிற்கு மேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு தமிழக கவர்னர் ஆகியோரை இவர்கள் அழைத்தும், அனைவரும் ஏன் மறுத்தார்கள் என்பதை ஜெயகுமார் சொல்ல வேண்டும். காரணம், ஊழல் செய்து அதற்காக நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளியான அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், இப்போது எங்கே இருந்திருப்பார்? பெங்களூரு சிறையில் முதல் குற்றவாளியாக சசிகலாவோடு இருந்திருப்பார். நான் அவரை கொச்சைப்படுத்திப் பேசுவதாக யாரும் கருதக்கூடாது. அப்படிப்பட்டவரின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்களுடைய கட்சி அலுவலகத்தில், சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளட்டும். அதுபற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மக்களின் வரிப்பணத்தில் செயல்படும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சட்டமன்றத்தில் அவரது படத்தை வைக்கிறார்கள் என்றால், அதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? அரசு அலுவலகங்களில் அவரது படங்கள் இருப்பது தவறு என்று, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.அன்பழகன் மூலமாக ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி, அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று கூட அந்த வழக்கு விசாரணை நடைபெறும்போது, இதுகுறித்து தெரிவிக்க இருக்கிறோம். எனவே, தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சார்ந்த செய்திகள்