Skip to main content

குரங்கணி தீ விபத்தில் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபிடிக்கவில்லை! அமைச்சர் சீனிவாசனின் பகீர் பேட்டி!!

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
seenivasan

      

 மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் குரங்கணி மலைப்பகுதியான கொழுக்குமலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கியதில் பன்னிரெண்டு பேர் தீக்கிரையாகி உள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர்  தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலும் அதில் பலருக்கு அறுபது சதவிகிதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் தீவிர சிகிச்சை அளித்து வந்தும் கூட கவலைக்கிடமாகத்தான் இருந்து வருகிறார்கள்.  இந்த அளவுக்கு வனத்தீயில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் ஒரு மினி பேட்டியை தொடர்ந்தோம். 

 

நக்கீரன் :  தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்படுமா? அல்லது முறைப்படுத்தப்படுமா?
சீனிவாசன் : முதல்வர் மற்றும் துணை முதல்வரின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை செயலாளர் அதுல்யாமிஷ்ராவை குரங்கணி தீவிபத்து விசாரணை ஆணையராக நியமித்து இருக்கிறார்கள். அதனால அவருடைய விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்த பின்புதான் எதுவும் சொல்ல முடியும். இப்போதைக்கு எதுவும் சொல்லக்கூடாது.

 

க்கீரன் :  தற்போது போடி ரேஞ்சர் செயில்சிங்கை சஸ்பெண்ட் செய்து இருக்கிறீர்கள். அதுபோல் துறையின் மேல்நடவடிக்கை எதுவும் இருக்கிறதா?
சீனிவாசன் :  அதற்காகத்தானே விசாரணை ஆணையமே நியமித்து இருக்கிறோம். அதன்மூலம்தான் தெரியும்.

 

நக்கீரன் : கொழுக்குமலை அடிவாரம் பகுதியில் பட்டா நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அதை சீரமைப்பதற்காக வைத்த தீ தான் வனப்பகுதியில் பரவியதாக ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது?
சீனிவாசன் : தம்பி, ஆள் ஆளுக்கு ஒன்னு பேசுவாங்க. அதையெல்லாம் உறுதிபடுத்த முடியாது. விசாரணை கமிசன் மூலம் கூடிய விரைவில் நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும்.

 

நக்கீரன் : சென்னையில் உள்ள ட்ரெக்கிங் கிளப் அனுமதி வாங்கித்தான் கொழுக்குமலை வனப்பகுதிக்கு போனதாக கூறுகிறார்களே?
சீனிவாசன் : குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசன் வரைக்கும் ட்ரெக்கிங் போவதற்குத்தான் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கி இருக்கிறார்களே தவிர கொழுக்குமலைக்கெல்லாம் அனுமதி வாங்கவில்லை. அப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அதுவும் இந்தவிசாரணை மூலம் வெளிவரும்.

 

நக்கீரன் : சம்பவத்தன்று துணை முதல்வரான ஓ.பி.எஸ்.-ன் மகன் ரவீந்திரநாத் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினால்தான் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியில் மெத்தனப்போக்கை கடைபிடித்ததாகவும் பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறதே? 
சீனிவாசன் : தம்பி, அதெல்லாம் ஒன்னும் இல்லை. சம்பவம் கேள்விப்பட்ட உடனே மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.யும் ஸ்பாட்டுக்கு சென்று தீ விபத்தில் சிக்கியவர்கள் பலரை மீட்டு உடனே போடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் போர்க்கால அடிப்படையில் போலீசார், வனத்துறை, ராணுவம் மற்றும் அப்பகுதி மக்களும் சம்பவ இடத்திற்கு சென்று தீக்காயங்களுடன் இருந்தவர்களை காப்பாற்றி விடிய விடிய டோலி கட்டி தூக்கி வந்து குரங்கணி ஆஸ்பத்திரியில் உயர்தரமான முதலுதவி சிகிச்சை அளித்தது தேனிக்கும், மதுரைக்கும் அனுப்பி வைத்தோம். அதுபோல் இறந்தவர்களை அதிகாலையிலேயே ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதுவரை துணை முதல்வருடன் நானும், உதயக்குமார் அங்கேயே இருந்தோம். அது எல்லோருக்கும் தெரியும். நீங்களும்தானே தம்பி பார்த்தீர்கள். அந்த அளவுக்கு தீ விபத்தில் சிக்கிய விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் போராடினார்களே தவிர மாவட்ட நிர்வாகம் ஒன்னும் மெத்தன போக்கையெல்லாம் கடைபிடிக்கவில்லை. அப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள் என்பது தான் உண்மை!

சார்ந்த செய்திகள்