Skip to main content

6 காங். எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைக்க பா.ஜ.க. திட்டம்!

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதாதளமும் எந்த வகையிலும் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடமாட்டோம் என்று உறுதியாக கூறியிருக்கின்றன.

 

bjp

 

இந்நிலையில், எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை மனுவை வாங்கிய ஆளுநர் காங்கிரஸ், ம.ஜ.த. குழுவைச் சந்திக்க நேரம் ஒதுக்காமல் இழுத்தடித்தார். மோடியின் விசுவாசி என்று விமர்சிக்கப்படுகிற ஆளுநர் வஜுபாய் வாலா பா.ஜ.க.வின் குதிரை பேரத்திற்கு அப்பட்டமாக துணைபோவது ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் கூறியது. ஆளுநர் அனுமதி மறுத்தால் தர்ணாவில் ஈடுபடப்போவதாக இரண்டு கட்சிகளும் எச்சரித்தன. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கினார் ஆளுநர்.

 

இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று வெளியான தகவல் தவறு என்றும், அவர்கள் தங்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்றும் முதல்வர் சித்தராமய்யா கூறினார்.

 

இரண்டு கட்சிகளும் தங்கள் நிலையில் உறுதியாக உள்ளதால், பா.ஜ.க. புதிதாக ஒரு சதித்திட்டத்தை தீட்டியிருப்பதாக கர்நாடகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பெல்லாரி பகுதியில் செல்வாக்கான ரெட்டி சகோதரர்கள் மூலமாக அந்தப் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 6 எம்எல்ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்வது என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில் இருக்கிற உறுப்பினர்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிடும் என்று திட்டமிடுகிறார்களாம்.

 

பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால், அதன்பிறகு அந்த ஆறுபேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்களாம். இப்படி ஒரு தகவல் பரவிய நிலையில், அப்படி யாரும் பதவிவிலக மாட்டார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்